அன்பும் பொதுநலனும்.. – SMTC

Vatican News

அன்பும் பொதுநலனும்..

நாம், பிறர் மீது, எல்லைகள் ஏதுமற்ற அன்பு கொண்டிருக்கவும், அவர்கள் நலனில் அக்கறை காட்டவும் வேண்டுமென, இறைவனின் எல்லையற்ற அன்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது
அண்மைக் காலங்களில் இவ்வுலகை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்றுநோய் குறித்து, ஆகஸ்ட் மாத துவக்கத்திலிருந்து, ‘உலகை குணப்படுத்தல்’என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வி உரைகளில், தன் சிந்தனைகளை, ஒரு தொடராக பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 9ம் தேதி, இப்புதனன்று, ‘அன்பும் பொதுநலனும்’ என்ற தலைப்பில் உரையை வழங்கினார்.

செப்டம்பர் 2ம் தேதி, கடந்த புதனன்று, வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், 189 நாள் இடைவெளிக்குப்பின், முதன் முறையாக, மக்களை நேரடியாக சந்தித்த திருத்தந்தை, அதே வளாகத்திலேயே, இவ்வாரமும்  மக்களைச் சந்தித்து உரை வழங்கினார். முதலில், புனித மத்தேயு நற்செய்தி 15ம் பிரிவில் காணப்படும், இயேசு நாலாயிரம் பேருக்கு உணவளித்த புதுமை குறித்து பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

மத்தேயு நற்செய்தி 15,32-37

இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார். அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள். தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர்.

இந்த நற்செய்தி வாசகத்தைத் தொடர்நது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அன்பு சகோதரர், சகோதரிகளே, காயப்பட்டுள்ள இவ்வுலகை குணப்படுத்துவதில், நம் தனிப்பட்ட, மற்றும், ஒன்றிணைந்த முயற்சிகளின் நோக்கமாக, பொதுநலன் குறித்த அக்கறை இருக்கவேண்டும் என்பதை, திருஅவையின் சமுகப்படிப்பினைகளின் ஒளியில், தற்போதைய கொரோனா தொற்றுநோய் குறித்து, கடந்த வாரங்களில் நாம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். நம் கிறிஸ்தவ அர்ப்பணம் என்பது, இறைவனின் நிபந்தனைகள் அற்ற அன்பால் தூண்டப்பட்டதாக உள்ளது. நாமும் பிறர் மீது, எல்லைகள் ஏதுமற்ற அன்பு கொண்டிருக்கவும், அவர்கள் நலனில் அக்கறை காட்டவும் வேண்டுமென, இறைவனின் எல்லையற்ற அன்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது

ஒரே மனிதகுல குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையில், நம் நலவாழ்வு என்பது, தனியுடைமை அல்ல, மாறாக, பொதுவான ஒன்று. நம் கலாச்சார, பொருளாதார, மற்றும், அரசியல் நடவடிக்கைகளின் மையமாக, ஒவ்வொரு மனிதரையும், பொதுநலனையும்  நாம் வைக்கும்போது, உண்மையிலேயே, நாம், நலமான, நீதியான, அமைதியான உலகை கட்டியெழுப்ப முடியும். இதன் வழியாக, அன்பின் கலாச்சாரத்திற்கு நம்மால் சிறப்புப் பங்காற்றமுடியும். இந்த கொரோனா நோய் பரவல் என்பது, எவ்வித கலாச்சார, அரசியல் தடைகளையோ, பாகுபாடுகளையோ கொண்டிருக்கவில்லை. அதுபோல், நாமும், இக்கொள்ளைநோய்க்கு எதிரான நம் நடவடிக்கைகளின்போது, நம் அன்பில், எவ்வித தடைகளையும் பாகுபாடுகளையும் கொண்டிராமல், நம் கிறிஸ்தவ அழைப்பிற்கு விசுவாசமாக இருந்து, பொதுநலனுக்காக உழைத்திடவேண்டும்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் உலக நாள் முதல்முறையாக சிறப்பிக்கப்படுவதை கூடியிருந்தோரிடம் நினைவுறுத்தி, இந்நாளையொட்டி விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.