Vatican News

அன்பும் பொதுநலனும்..
செப்டம்பர் 2ம் தேதி, கடந்த புதனன்று, வத்திக்கானிலுள்ள புனித தமாசோ (San Damaso) வளாகத்தில், 189 நாள் இடைவெளிக்குப்பின், முதன் முறையாக, மக்களை நேரடியாக சந்தித்த திருத்தந்தை, அதே வளாகத்திலேயே, இவ்வாரமும் மக்களைச் சந்தித்து உரை வழங்கினார். முதலில், புனித மத்தேயு நற்செய்தி 15ம் பிரிவில் காணப்படும், இயேசு நாலாயிரம் பேருக்கு உணவளித்த புதுமை குறித்து பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.
மத்தேயு நற்செய்தி 15,32-37
இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின்மீது பரிவு கொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிடவும் நான் விரும்பவில்லை; அனுப்பினால் வழியில் தளர்ச்சி அடைந்துவிடலாம்” என்று கூறினார். அதற்குச் சீடர்கள் அவரிடம், “இவ்வளவு திரளான மக்களுக்கு அளிக்கப் போதுமான உணவு நமக்குப் பாலைநிலத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள், “ஏழு அப்பங்கள் உள்ளன; சில மீன்களும் இருக்கின்றன” என்றார்கள். தரையில் அமருமாறு மக்களுக்கு அவர் கட்டளையிட்டார். பின்பு அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர்.
இந்த நற்செய்தி வாசகத்தைத் தொடர்நது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அன்பு சகோதரர், சகோதரிகளே, காயப்பட்டுள்ள இவ்வுலகை குணப்படுத்துவதில், நம் தனிப்பட்ட, மற்றும், ஒன்றிணைந்த முயற்சிகளின் நோக்கமாக, பொதுநலன் குறித்த அக்கறை இருக்கவேண்டும் என்பதை, திருஅவையின் சமுகப்படிப்பினைகளின் ஒளியில், தற்போதைய கொரோனா தொற்றுநோய் குறித்து, கடந்த வாரங்களில் நாம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். நம் கிறிஸ்தவ அர்ப்பணம் என்பது, இறைவனின் நிபந்தனைகள் அற்ற அன்பால் தூண்டப்பட்டதாக உள்ளது. நாமும் பிறர் மீது, எல்லைகள் ஏதுமற்ற அன்பு கொண்டிருக்கவும், அவர்கள் நலனில் அக்கறை காட்டவும் வேண்டுமென, இறைவனின் எல்லையற்ற அன்பு நமக்கு அழைப்பு விடுக்கிறது
ஒரே மனிதகுல குடும்பத்தின் அங்கத்தினர்கள் என்ற முறையில், நம் நலவாழ்வு என்பது, தனியுடைமை அல்ல, மாறாக, பொதுவான ஒன்று. நம் கலாச்சார, பொருளாதார, மற்றும், அரசியல் நடவடிக்கைகளின் மையமாக, ஒவ்வொரு மனிதரையும், பொதுநலனையும் நாம் வைக்கும்போது, உண்மையிலேயே, நாம், நலமான, நீதியான, அமைதியான உலகை கட்டியெழுப்ப முடியும். இதன் வழியாக, அன்பின் கலாச்சாரத்திற்கு நம்மால் சிறப்புப் பங்காற்றமுடியும். இந்த கொரோனா நோய் பரவல் என்பது, எவ்வித கலாச்சார, அரசியல் தடைகளையோ, பாகுபாடுகளையோ கொண்டிருக்கவில்லை. அதுபோல், நாமும், இக்கொள்ளைநோய்க்கு எதிரான நம் நடவடிக்கைகளின்போது, நம் அன்பில், எவ்வித தடைகளையும் பாகுபாடுகளையும் கொண்டிராமல், நம் கிறிஸ்தவ அழைப்பிற்கு விசுவாசமாக இருந்து, பொதுநலனுக்காக உழைத்திடவேண்டும்.
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாக்குதல்களிலிருந்து கல்வியைப் பாதுகாக்கும் உலக நாள் முதல்முறையாக சிறப்பிக்கப்படுவதை கூடியிருந்தோரிடம் நினைவுறுத்தி, இந்நாளையொட்டி விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

இயேசுவின் திருஉடலை….
அவரின் உற்றுநோக்கு நம் இதயங்களுக்குச் செல்கிறது
காயங்களால் உருக்குலைந்துள்ள திருமுகம், மாபெரும் அமைதியை வெளிப்படுத்துகிறது. விசுவாசம் கொள்ளுங்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனச் சொல்வதுபோல் உள்ளதுமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்இயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணி, ஏப்ரல் 11, இச்சனிக்கிழமை உரோம் நேரம் மாலை ஐந்து மணிக்கு, தூரின் நகர் பேராலயத்தில் பொது மக்களுக்குத் திறக்கப்படுவதை முன்னிட்டு, இயேசுவின் திருமுகம் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
காயங்களால் உருக்குலைந்துள்ள திருமுகம், மாபெரும் அமைதியை வெளிப்படுத்துகிறது. விசுவாசம் கொள்ளுங்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனச் சொல்வதுபோல், அவரின் உற்றுநோக்கு, நேரிடையாக, நம் கண்களுக்கு அல்ல, மாறாக, நம் இதயங்களுக்குச் செல்கிறது, கடவுளின் அன்பின் சக்தி, உயிர்த்த ஆண்டவரின் வல்லமை, எல்லாப் பொருள்களையும் விஞ்சி நிற்கிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், #HolyShroud என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாயின.
இயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணியின் முன்பாக நடைபெறும் வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=VJHI8bI0LWg என்ற யூடியூப் முகவரி வழியாகப் பங்கு கொள்ளுங்கள். இந்த திருத்துணியின் மனிதரை நாம் நோக்குவோம், அவரில், ஆண்டவரின் ஊழியரின் தோற்றங்களை கண்டு கொள்கிறோம் என்றும் திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்

கடவுளின் வல்லமை…
தன்னையே கையளிக்கும் அன்பில், கடவுளின் வல்லமை
இறைமகனின் மரணமும் உயிர்ப்பும் நமக்கு காண்பிப்பது என்னவென்றால், உலக சக்தியெல்லாம் கடந்து சென்றுவிடும், ஆனால், அன்பு ஒன்றே என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதேயாகும்கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்கடந்த சில வாரங்களாக இயேசுவின் மலைப்பொழிவு பேறுகள் குறித்த ஒரு தொடரை வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்ப்பை நோக்கிய புனித வாரத்தில் நாம் இருக்கும் இவ்வேளையில், அதுவும், கொள்ளை நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இயேசுவின் பாடுகள், மற்றும், உயிர்ப்பைப் பற்றி எடுத்துரைத்து, அன்பே என்றும் நிலைத்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அன்பு சகோதர சகோதரிகளே, இன்றைய கொள்ளை நோய் சூழல் உருவாக்கியிருக்கும் துன்பங்களும் நிச்சயமற்ற நிலைகளும்,கடவுள் எங்கே சென்று விட்டார் என சிலரை கேட்க வைக்கக்கூடும். புனித வாரத்தின் இந்நாட்களில், நாம், இறைவன் பட்ட பாடுகளின் விவரங்களைக் கேட்டு ஆறுதல் பெற முடியும். இயேசுவும், தான் வாழ்ந்த காலத்தில், ‘இவர்தான் வாக்களிக்கப்பட்ட மெசியாவா’ என்ற கேள்வியை பலரிடமிருந்து எதிர்நோக்கினார். இயேசுவின் இறப்பிற்குப் பின்னர்தான், நூற்றுவர் படைத்தலைவர் ஒருவர், ‘இயேசு உண்மையிலேயே கடவுளின் மகனாக இருந்தார்’ என்பதை அறிக்கையிட்டு உறுதிசெய்தார். இயேசு கிறிஸ்து, சிலுவையில் துன்பங்களை அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் கண்ட நூற்றுவர் தலைவர், இந்த அறிக்கையை வெளியிடுகிறார். கடவுள் தன் துன்பங்களை அமைதியாகத் தாங்கியது, நமக்கும் ஒரு பாடத்தைக் கற்றுத்தருகின்றது, அதாவது, தாழ்ச்சியுடைய, மற்றும், தன்னையே கையளிக்கும் அன்பில்தான் கடவுளின் வல்லமை வெளிப்படுகின்றது என்பதாகும்.
இயேசுவின் சீடர்களைப்போல் நாமும், நமக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ, அந்த வழியில் இறைவன் தன் வல்லமையைப் பயன்படுத்தி தீர்வு காணவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும், இறைமகனின் மரணமும் உயிர்ப்பும், நமக்கு காண்பிப்பது என்னவென்றால், உலக சக்தியெல்லாம் கடந்து சென்றுவிடும், ஆனால், அன்பு ஒன்றே என்றும் நீடித்து நிலைத்திருக்கும் என்பதேயாகும். அன்பு சகோதரர் சகோதரிகளே, சிலுவையிலறையுண்டு உயிர்த்த இறைவனிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொள்வோம். அவரே நம் நொறுங்குண்ட நிலைகளை அரவணைத்து, நம் பாவங்களைக் குணப்படுத்தி, நம்மை அவரருகே கொணர்ந்து, நம் சந்தேகங்களை விசுவாசமாகவும், அச்சங்களை நம்பிக்கையாகவும் மாற்றுகிறார்.
இம்மறைக்கல்வியுரையின் இறுதியில், சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியாக, தன்னோடு இந்த மறைக்கல்வி நேரத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய்மைப்படுத்தப்பட்ட இதயத்துடனும், தூய ஆவியாரின் வல்லமையால் இடம்பெறும் புதுப்பித்தலுடனும், இயேசுவின் உயிர்ப்பை சிறப்பிக்க இந்த புனித வாரம் நம்மை நடத்திச் செல்வதாக என வேண்டி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.